முருக தரிசனம்:
அழகென்ற சொல்லுக்கு முருகன், தமிழ் கடவுள் என்பதை எல்லாம் தாண்டி முருகா என்பதற்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது.. கூர்மையாக கவனித்தீர்களானால் 'மு' என்பது முகுந்தனை(விஷ்ணு) குறிக்கும், 'ரு' என்பது ருத்ரனை குறிக்கும் மற்றும் 'க' என்பது கமலனை (பிரம்மன்) குறிக்கும்.. ஆக படைத்தல் (பிரம்மன்) காத்தல் (விஷ்ணு) மற்றும் அழித்தல் (ருத்திரன்) ஆகிய மூன்று செயல்களையும் குறிக்கும் விதமாக முருகா என்கிற நாம மந்திரம் அமைந்திருக்கிறது. முருகா என்கிற பெயருக்குள்ளேயே படைத்தல், காத்தல் ,மற்றும் அழித்தல் என்கிற மூன்றும் அடங்கியுள்ளது. இது தவிர அவனுக்கு கார்த்திகேயன், ஸ்கந்தன், சுப்ரமணியன், குமரன், குகன், கதிர்வேலன், தண்டாயுதபாணி என பல நாமங்கள் உள்ளது. ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு அர்த்தம் இருக்கிறது.
முருகன் பெயர் சரி அவனுடைய அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருஆவினன்குடி(பழனி), சுவாமிமலை, திருத்தணி,பழமுதிர்சோலை ஆகியவை மனிதனின் ஆறு முக்கிய ஆதாரங்களை குறிக்கும் என்பது தெரியுமா. ஆமாம் மனித உடலில் உள்ள ஆறு ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஆறுபடை வீடுகள் அமைந்துள்ளது. வெளியில் இருக்கும் ஆறுபடை வீடுகளை தரிசனம் செய்வதன் மூலம் நாம் நமது சக்தி ஆதார நிலையங்களை மேம்படுத்தலாம். அவை மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆஞ்ஞை. இந்த ஆறு ஆதாரங்கள் தான் வெளியே ஆறு படை வீடுகளாக இருக்கிறன்றன. ஆகையால் தான் ஆற்றல் நிறைந்த இந்த திருத்தலங்களுக்கு சென்று வழிபட்டால் உங்களுக்கு மகத்தான நன்மைகள் கிடைக்கிறது. இதை தவிர கண்டி கதிர்காமம், நல்லூர், கந்தர்கோட்டம், வடபழனி, வயலூர், மலேஷியா பத்துமலைக் குகை கோயில், சிட்னி முருகர் மற்றும் நமது மேரிலேண்ட் முருகர் என உலகம் முழுவதும் முருகரை வழிபட பல கோயில்கள் இருக்கிறது . சீன தேசத்திலும் முருகரை வழிபட்டத்திற்க்கான சுவடுகள் உள்ளன.
அறுபடை வீடுகள், கோயில்கள் எல்லாம் சரி.. அவனை எப்படி வழிபடுவது. அதற்க்கு ராமலிங்க வள்ளலார் இவ்வாறாக கூறுகிறார்.. நாம் ஊன்(உடல்) உருக உள்ளம் உருக முருகா முருகா என்று வழிபட வேண்டும் என்று கூறுகிறார்.. அப்படி வழிபடும் போது வரும் கண்ணீர் நம் உடலை நனைக்க வேண்டும் என்கிறார்..உள்ளம் உருக இறைவனை வணங்கும்போது வரும் ஆனந்த கண்ணீர் நம் உடலை நனைக்க வேண்டும் என்கிறார்.. உடல் இறைவனை வணங்க வேண்டும்.. உள்ளம் இறைவனை உணர வேண்டும்.. அவனது பாடல்களை படிக்கும்போது (கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம் கந்தர் அனுபூதி, திருப்புகழ் போன்ற நூல்கள்) உள்ளம் முழுவதும் முருகனை நினைத்து படிக்க வேண்டும்..
சரி நாம் அப்படியா போய் வணங்குகிறோம் .. கோயிலுக்கு சென்றால் நமது தேவைகள் எல்லாம் பட்டியலிட்டு இறைவனிடம் அப்ப்ளிகேஷன் போடுகிறோம்.. எனக்கு அது கொடு இது கொடு என்று ரொம்ப சுயநலமாக நடந்து கொள்கிறோம்.. சரி அப்படி கேட்டு நடந்த விஷயங்களுக்கு பிறகாவது சும்மா இருக்கிறோமா? இல்லையே நமது ஆசைகளுக்கு தான் எல்லை இல்லையே.. திரும்பவும் போய் ஏதாவது கேட்கிறோம்.. இப்படியே கோயிலுக்கு செல்வது நாம் அங்கு இருக்கும் இறைவனை வணங்குவதற்கு அல்லாமல் நமது தேவைகளை பூர்த்தி செய்யும் இடமாக பார்க்கிறோம்..
நாம் இறைவனிடம் கேட்பதில் மற்றும் நமது மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைப்பதில் எதுவும் தவறு இல்லை.. ஆனால் ஒன்றை மட்டும் நாம் மறந்து போய் விடுகிறோம்.. நம்மை படைத்த இறைவனுக்கு நமது தேவைகள் தெரியாத என்ன? அவனுக்கு நாம் மீண்டும் ஞாபகப்படுத்த தேவையில்லை.. .. அதற்கு பதிலாக எந்த கோயிலுக்கு போனாலும் அந்த கோயிலின் இறைவனை பற்றி அவனது பெருமைகளை பற்றி அறிய முற்பட வேண்டும்.. மேலும் இறைவனை வணங்கும்போது நமது குறைகளை/தேவைகளை மட்டும் கூறாமல் நிறைகளையும் கூறி அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும்.. அவ்வாறாக செய்யும் போது நாம் எவ்வளவு நல்ல நிலைமையில் இருந்தாலும் இறைவன் நம்மை மேலும் நல்ல நிலையில் கொண்டு வைப்பார்.. மேலும் நம்முள் நேர்மறை (positive ) எண்ணங்கள் அதிகமாகி எதிர்மறை(negative ) எண்ணங்கள் குறைந்து போகும்.
இவ்வாறாக கோயிலுக்கு சென்று வழிபட ஆரம்பிக்க, மற்றும் அவனது நூல்களை படிக்க படிக்க நமது உள்ளம் செம்மை படும்.. மிக முக்கிய ஆறு தீய குணங்களான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், அகங்காரம்(பெருமை) ஆகியவை நம்மை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும். மனம் தூய்மை ஆகும்.. நாளடைவில் முருக தரிசனம் நிகழும்.. ஆமாம் புறத்தில் நாம் முருகனை தரிசிப்பது போல நமக்குள்ளும் அந்த தரிசனம் நிகழும்.. அப்படி நாம் நம்முள் இருக்கும் முருகனை கண்டு கொண்டால் அவர் நம் வாழ்க்கையை நடத்தி செல்லுவார்.. குழப்பமான நேரங்களில், துன்ப படும் நேரங்களில் நமது கூடவே இருந்து வழி நடத்துவார். நமக்கு மன பலம், தெளிவு அமைதி போன்றவற்றை கொடுப்பார்..
முருகன் உள்ளே இருக்கிறான் என்ற நினைப்பே நம்மை நல்வழியில் செலுத்தும்.. எதையும் சந்திக்கவும் சாதிக்கவும் பெரு வலிமையை தரும்.. அதன் பின்பு எல்லைகளும் தொல்லைகளும் நமக்கு இல்லை..
அதற்கு மரிலாண்ட் முருகர் நமக்கு துணை செய்வாராக
(சிறு குறிப்பு) "முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும். மெல்லின, இடையின, வல்லின மெய் எழுத்துக்களுடன் உ எனும் உயிரெழுத்து ஒவ்வொன்றுடனும் சேர்ந்து முருகு (ம்+உ, ர்+உ, க்+உ - மு ரு கு) என்றானதால், இம்மூன்றும் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி இவைகளைக் குறிக்கும். ஆகவே அழகு முருகனை அனுதினமும் தியானிப்பவர்கள் இளமையோடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வில் பலவித வளத்தோடும் சந்தோசமாக வாழ்கிறார்கள்.. இது அனுபவபூர்வமாக நான் கண்ட உண்மை..
No comments:
Post a Comment